×

பெரம்பூர் வடக்கு நெடுஞ்சாலையில் திறந்தவெளி கழிவறையாக மாறிய நடைபாதை

பெரம்பூர்: சென்னையில் மாநகராட்சி சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட்  சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடைபாதை வளாகம், ஸ்மார்ட் மின் கம்பங்கள், வண்ண விளக்குகள், இருக்கை வசதி, சுவரில் அழகிய ஓவியங்கள், வாகன பார்க்கிங் வசதி என அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர, சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பின் பிடியிலும், பார்க்கிங் பகுதியாகவும், கடைகளாகவும் காட்சியளிக்கிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. இதனால், பாதசாரிகள் அவற்றை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் ரயில் நிலையங்களில் பெரம்பூர் ரயில் நிலையமும் ஒன்று. வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் சென்ட்ரலில் கடைசியாக நிற்பதற்கு முன்பு பெரம்பூர் ரயில் நிலையத்தில்  நிற்கும். இங்கு ஏராளமான வெளி மாநில  பயணிகள் இறங்குவர்.   இதனால் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும்.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து பெரம்பூர் பேருந்து நிலையம் செல்லும், பெரம்பூர் வடக்கு நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபாதை முழுவதும் சிதலமடைந்துள்ளதால், அதில் நடந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயப்படுகின்றனர். நடைபாதையை ஒட்டி பல இடங்களில் பழுதடைந்த வாகனங்கள் ஆக்கிரமித்து  நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.
மேலும், இங்கு பொது கழிப்பறை வசதி இல்லாததால், பலர் நடைபாதைகளை திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு வரும் குடிமகன்கள் நடைபாதைகளில் சிறுநீர் கழித்து வருகின்றனர்.  இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் இந்த நடைபாதையை சிலர் பாராகவும் பயன்படுத்தி வருவதால் ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைந்து சிதறி கிடக்கின்றன. சில இடங்களில் நடைபாதை முழுவதும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது.

எனவே, இந்த நடைபாதைகளை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும், என பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பெரம்பூர் பஸ்  டிப்போ வரை தினசரி நூற்றுக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர். ஆனால், இந்த நடைபாதைகள் முழுவதும் திறந்தவெளி கழிவறையாகவும், ஆக்கிரமிப்பு கடைகளாகவும் மாறியுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடைபாதையை சீரமைக்கவும்,  ஆக்கிரமிப்பு கடை மற்றும் வாகனங்களை அகற்றவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : walkway ,Perambur North Highway , open toilet, Perambur North Highway
× RELATED பங்குனி மாத பூஜை, ஆறாட்டு திருவிழா: சபரிமலை கோயில் நடை 14ல் திறப்பு